காதலர் தினம் !!!

கருத்தொருமித்த காதல்
காலத்தால் அழியாது.
கட்டுப்பாடான உணர்வுகளோடு
காதல் வளர்த்தால்
காண்போர்களிடம்கூட
காதலுக்கு மரியாதை!

காட்டாற்று வெள்ளமாய்
காதலுணர்வு கரைபுரண்டால்
நட்டாற்றில் வீழ்கின்ற
நாட்களே உருவாகும்!

தனிமைச் சந்திப்பிலும்
தரங்கெடா ஒழுக்கமே
இனிமை சேர்த்திடும்
இல்லறம் வரையிலும்!

காதலைக்கொண்டாடுங்கள்
கனிவோடு இதயத்துக்குள்.
காட்சிப்பொருளாய் ஆக்காதீர்
காதலென்ற புனிதமதை!

காதலியின் கழுத்தில்
கட்டுகின்ற மஞ்சள் நாணே
காதலின் பரிசென்று
கவனத்தில் கொள்வீராக!

வாழ்த்து அட்டைகளும்
வகைவகையான பரிசுகளும்
ஆழ்த்திடுமோ காதலியின்
அகத்தை மகிழ்ச்சிதன்னில்?

காதலர்தினக் கொண்டாட்டம்
கலாச்சாரச் சீரழிவே!
ஆதலினால் இளையோரே....
அப்புனிதம் குலைக்காதீர்!

Get this gadget at facebook popup like box