காதல் தோற்றதில்லை…

காதலில் தோல்வி என்பதை
 ஒத்துக் கொள்ள முடிவதில்லை
 காரணம்,
காதல் தோற்பதில்லை…எனக்குள் இளைப்பாறிக் கிடந்த‌
 உன் இதயம்
 இன்று இடம் மாறி இருக்கலாம்…

என் இலைகளுக்கிடையே இருந்த‌
 உன் கூட்டை
 இன்று நீ
 வேறு மரத்துக்கு மாற்றி இருக்கலாம்…

அதற்காக‌
 நீ எனக்களித்த பூக்கள் எல்லாம்
 சருகுகள் என்று என்னால்
 பிரகடனப்படுத்த முடிவதில்லை…

நீ
 தேவதை தான்.
கோட்டை மாறியதால்
 கொள்ளிவாய்ப் பிசாசாக முடியாது…

வைகையாற்றின் ஒரு துளியாய்…
குற்றால அருவியின் ஒரு துளிர்த் துண்டாய்
 எனக்குள் நீ இருந்த இடம்
 இன்னும் எனக்கு சொர்க்கம் தானடி…

உன்னோடிருந்து நான் சுவாசித்த‌
 கடற்கரைக் காற்றெல்லாம்
 சோகத்தின் முள்முடிகள் என்று
 சம்மதிக்க முடியவில்லை…

தோளில் சாய்ந்து கொண்டு
 கண்ணீரின் ஒரு சொட்டை
 என் கன்னத்துக்கு கொடுத்துவிட்டு
 நீ தந்த காதல் இன்னும் எனக்குள் இருக்கிறது…

எத்தனையோ முறை
 நீ கொடுத்த முத்தங்களைச் சுமந்த்தேன்,
இந்த முறை
 நீ கொடுத்த சிலுவையைச் சுமக்கிறேன்…

கடந்து போன வினாடி நிஜம்…
நுரையீரல் தொட்டுத் திரும்பிய சுவாசம் நிஜம்…
எனில் கரைந்து
 நீ கடைந்த காதல் நிஜம்…

என் கவலை எல்லாம் ஒன்றுதான் கண்மணி…

நீ வந்து தங்கியபோது
 விறகாய்க் கிடந்த என் கிளைகள்
 இப்போது கொத்துக் கொத்தாய் காய்த்திருக்கிறது
 கொத்தித் தின்ன தான் நீ இல்லை…!

No comments:

Get this gadget at facebook popup like box